நீலகிரிக்கு ரெட் அலர்ட்..!! அவசர அவசரமாக விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு..!!
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேசிய மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் தீவிரமடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகையால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 32 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் நீலகிரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். பேரிடர் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த குழுவினருக்காக இரண்டு வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நீலகிரிக்கான கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெறும் வரை, மீட்புக் குழுவினர் அங்கு தங்கியிருப்பார்கள் என தெரிகிறது.