மும்பைக்கு ரெட் அலெர்ட்!. கனமழையால் 6 பேர் பலி!. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!.
Mumbai: மும்பைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையால் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவின் மும்பை உள்பட நகரங்களில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும், வெள்ளப்பெருக்கால் மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. மும்பை கலீனா, செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
மும்பை நகருக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரி கனமழை காரணமாக நிரம்பியது. கனமழை காரணமாக புனே கதக்வஸ்லா அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மும்பையில் கனமழை பெய்து வருவதால் மித்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விஹார் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் சாலையில் வழிந்தோடுகிறது.
புனே மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் மற்றும் புனே கிராமத்தில் நேற்று பெய்த கனமழையின் போது நிலச்சரிவு காரணமாக ஒருவர் என 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பால்கர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கனமழை எச்சரிக்கையை அடுத்து தானேயில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஜூலை 26 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 2,192 பேரை அவர்களின் பாதுகாப்புக்காக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மழை நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அனைத்து அதிகாரிகளும் களத்தில் இருக்குமாறு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேட்டுக் கொண்டார்.
வெள்ளச் சூழலை சமாளிக்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் அனைத்து அதிகாரிகளும் களத்தில் இருக்குமாறு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேட்டுக் கொண்டுள்ளார். வியாழக்கிழமை பல பகுதிகளில் கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் மீட்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Readmore: எத்தியோபியா நிலச்சரிவு!. பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்!. ஐ.நா. அதிர்ச்சி!