பாலியல் தொழிலாளர்களுக்கும் அங்கீகாரம்!. பென்ஷன், மெடிக்கல் லீவு வழங்கும் புதிய சட்டம்!. பெல்ஜியம் அரசு அதிரடி!
Belgium: மற்ற ஊழியர்களைப் போல் பாலியல் தொழிலாளர்களுக்கும் பென்ஷன், மெடிக்கல் லீவு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி பெல்ஜியம் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் தொழில் குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டப் பின், கடந்த மே மாதத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி கொண்டு வரப்பட்டிருந்த சட்டத்திற்கு பெல்ஜிய பாராளுமன்றத்தில் 93 பேர் ஆதரவாக வாக்கினை செலுத்தி இருந்தனர். 33 பேர் தங்களது வாக்கையே பதிவு செய்யாமல் இருந்தனர். இந்த சட்டத்திற்கு எதிராக யாரும் வாக்கு செலுத்தாத நிலையில், இச்சட்டத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அப்போது ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இன்றுமுதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
பெல்ஜியத்தில், 2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கோவிட் தொற்றுக்காலங்களில் அரசின் ஆதரவு பாலியல் தொழிலாளர்களுக்கு இல்லாததால், முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டம், மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம், சுகாதார காப்பீடுகள், நோய்வாய்ப்பட்ட நாளில் விடுமுறை என மற்ற வேலைகளில் ஊழியர்கள் பெறும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தும்.
இந்த சட்டம் தொழிலாளர்களுக்கு சில உரிமைகளையும், அவர்களது முதலாளிகளுக்கு சில நிபந்தனைகளையும் விதிக்கிறது. ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் முறித்துக் கொள்ளும் உரிமையும், வாடிக்கையாளரை மறுக்கும் உரிமையும், வேறு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் உரிமையையும் இந்த சட்டம் பாலியல் தொழிலாளர்களுக்கு வழங்குகிறது. அறைகளில் எச்சரிக்கை சுவிட்ச்களை பொருத்த வேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. இந்த சட்டம் பாலியல் திரைப்படங்களில் நடிப்பவர்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலியல் தொழிலாளர்கள் மற்ற தொழில்களில் உள்ள அதே பாதுகாப்புகளுக்கு உரிமையுடையவர்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக பெல்ஜியத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக்கியமாக மற்ற வேலைகளையும் தொழிலாளர்களையும் போலவே, பாலியல் தொழில்களும் தொழிலாளர்களும் பார்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரித்து கொண்டுவரப்பட்ட முதல் சட்டம் இது என்பதும், முதல் நாடு பெல்ஜியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.