12 பில்லியன் டாலர் மோசடி வழக்கு..! பெண் ரியல் எஸ்டேட் அதிபருக்கு மரண தண்டனை..!
நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரும் கோடீஸ்வரருமான ட்ரூங் மை லானுக்கு வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிராங் மை லான், தனிப்பட்ட நோக்கங்களுக்காக 12.5 பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடைய குடும்பம் வியட்நாம் நாட்டின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். 2022 மதிப்பீடுகளின்படி, டிராங்கின் சட்டவிரோத சொத்துக்கள் வியட்நாமின் மொத்த ஜிடிபியில் மூன்று சதவீதம் என்று கூறப்படுகிறது.
சைகோன் கொமர்ஷல் வங்கியின் (எஸ்சிபி) 90 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டிராங், போலி கடன் விண்ணப்பங்கள் மூலம் வங்கியில் இருந்து பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பிப்ரவரி 9, 2018 முதல் அக்டோபர் 7, 2022 வரை, அவர்கள் 916 போலி கடன் விண்ணப்பங்கள் மூலம் அவர் 12.5 பில்லியனை மோசடி செய்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோசடி, லஞ்சம் மற்றும் வங்கி விதிமுறைகளை மீறியதாக ட்ரூங் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர். வியட்நாமில் இத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்திற்கு மாறாக கடுமையான தண்டனை ஆகும்.
இதேபோல் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 85 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதல் நிதி கையாடல் மற்றும் வங்கிச் சட்டத்தை மீறுதல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் தான் இதற்கு காரணம் எனக் கூறினார்.