For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று மறுவாக்குப்பதிவு!… வெள்ளிக்கிழமை நடந்த வாக்குப்பதிவு செல்லாது!… தேர்தல் ஆணையம்!

05:47 AM Apr 22, 2024 IST | Kokila
இன்று மறுவாக்குப்பதிவு … வெள்ளிக்கிழமை நடந்த வாக்குப்பதிவு செல்லாது … தேர்தல் ஆணையம்
Advertisement

Re-voting: மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Advertisement

18-வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது . 7கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 26 ஆம் தேதி கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற இருக்கிறது . தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இருப்பினும், மணிப்பூரிலும் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், துப்பாக்கிச்சூடு, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், மின்னணு இயந்திரங்கள் உடைப்பு என பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதனால் அங்கு பல்வேறு வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

மணிப்பூரில் சமவெளிப் பகுதியில் வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி இன பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பல்வேறு நபர்கள் உயிரிழந்தனர். மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் உள் மணிப்பூர் தொகுதிக்கு மட்டும் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்றொரு தொகுதியான வெளி மணிப்பூருக்கு வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், வெள்ளிகிழமை நடைபெற்ற தேர்தலில் இம்பால் கிழக்கு பகுதியில் மொய்ரங் சட்டமன்றப் பகுதியில் தமன்போக்பி வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது. மேலும், கிழக்கு இம்பால் தோங்ஜூவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்டதாகவும், மேற்கு இம்பால் உரிபோக் பகுதியில் வாக்குச்சாவடி சூறையாடப்பட்டதாகவும் மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் உறுதிப்படுத்தினார்.

இதனால் வன்முறைச் சம்பவங்கள் நடந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியது. ஆனால், கலவரத்தில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறி மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மீண்டும் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், இந்த 11 வாக்குச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: குட்நியூஸ்!… இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு பெறலாம்!… வயது வரம்பு நீக்கம்!

Advertisement