ரத்தன் டாடா உயில்.. கடைசி வரை உடன் இருந்த வளர்ப்பு நாய், சமையல்காரருக்கு பங்கு..!!
தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். மறைந்த ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய், சமையல்காரர், உதவியாளருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களை உயில் எழுதி வைத்துவிட்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயிலில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார். தனக்கு சொந்தமான 10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து, அவரது அறக்கட்டளை, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபோய், வீட்டு ஊழியர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான பிறருக்கு சொத்துக்களையும் ஒதுக்கி உயில் எழுதி வைத்துள்ளார்.
ரத்தன் டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வருபவர் ராஜன் ஷா. இவர் தனது வளர்ப்பு நாயான டிட்டோவை கவனித்து வருகிரார்.. இந்த டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க உயில் எழுதி இருக்கிறார். டிட்டோவை கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ரத்தன் டாடா தத்து எடுத்து இருந்தார். இதற்கு முன்பு இருந்த நாய் இறந்துவிட அதே பெயரை இந்த நாய்க்கும் வைத்து வளர்த்து வந்தார்.
தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் உயில் எழுதி உள்ளார். தனது சர்வதேச நாடுகளின் பயணங்களின் போது இவர்களுக்காக ரத்தன் டாடா ஆடையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இது தவிர ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார்.
டாடாவின் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பங்குகள் : இந்த சொத்துக்கள் அனைத்தும் 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா எண்டோமெண்ட் பவுண்டேசனுக்கு மாற்றப்படும். டாடா நிறுவனங்களில் ரத்தன் டாடா பெயரில் இருக்கும் பங்குகள் அனைத்தும் புதிய டிரஸ்டிற்கு மாற்றப்படும். ரத்தன் டாடா பல ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார். அவை அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு பவுண்டேசனுக்கு மாற்றப்பட்டு சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். 2022 இல் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை, லாப நோக்கற்ற முறையில் செயல்பட்டு, குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது.
ரத்தன் டாடாவுக்கு சொந்தமாக 20-30 சொகுசு கார்கள் உள்ளன. இவை அனைத்தும் அவரது கொலாபா இல்லம் மற்றும் தாஜ் வெலிங்டன் மியூஸ் அடுக்குமாடி குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. அவை புனேவில் உள்ள டாடா குழுமத்தின் அருங்காட்சியகத்திற்காக வழங்கப்படலாம் அல்லது ஏலம் விடப்படலாம். டாடா சென்ட்ரல் தொகுப்புக்கு அவரது ஏராளமான விருதுகள் நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
டாடா வசித்த வீட்டின் பெயர் ஹலேகாய். இது, டாடா சன்ஸ் துணை நிறுவனமான எவார்ட் இன்வெஸ்ட்மென்ட்டுக்கு சொந்தமானது. மேலும் அதன் எதிர்காலம் எவார்ட்டின் கையில் இருக்கிறது. இதேபோல் ரத்தன் டாடா அலிபாக்கிலும் ஒரு பங்களா கட்டினார். அதன் முடிவும் எவார்ட்டிடம் இருக்கிறது.
100 பில்லியன் டாலர் டாடா குழுமத்தை வழிநடத்திய போதிலும், ரத்தன் டாடா குழும நிறுவனங்களில் தனிப்பட்ட பங்குகள் குறைவாக இருப்பதால் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரது உயில், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இறுதி செய்ய பல மாதங்கள் ஆகலாம்.
ரத்தன் டாடாவின் தலைமைப் பாரம்பரியம் : டிசம்பர் 28, 1937 இல் பிறந்த ரத்தன் டாடா, தலைமைத்துவம், நெறிமுறை வணிக நடைமுறைகள் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றின் நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றி, மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அக்டோபர் 9ஆம் தேதி காலமானார். 1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகவும், 2016 இல் இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றிய அவர், 1991 இல் 5.7 பில்லியன் டாலரிலிருந்து 2012 க்குள் 100 பில்லியன் டாலராக நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்.