For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Palani: 2024ல் வரும் அபூர்வ பங்குனி உத்திரம்!… பழனியில் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!… திருமண வரம் தரும் என்பது ஐதீகம்!

06:12 AM Mar 18, 2024 IST | 1newsnationuser3
palani  2024ல் வரும் அபூர்வ பங்குனி உத்திரம் … பழனியில் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் … திருமண வரம் தரும் என்பது ஐதீகம்
Advertisement

Palani: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்குகிறது

Advertisement

ஒவ்வொரு மாத பெளர்ணமியும் முக்கிய விரத நாளாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதிலும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமியும் தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக கொண்டாடப்படுவது தனிச்சிறப்பாகும். இவற்றில் தை மாத பெளர்ணமி தை பூசமாகவும், வைகாசி மாத பெளர்ணமி வைகாசி விசாகமாகவும், பங்குனி மாத பெளர்ணமி பங்குனி உத்திரமாகவும், கார்த்திகை மாத பெளரண்மி திருக்கார்த்திகையாக பெரும் விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகும். ஆனால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். பங்குனி மாத பெளர்ணமியும், உத்திர நட்சத்திரமும் இணையும் நாளே பங்குனி உத்திரமாகும். அதாவது தமிழ் மாதங்களில் பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி. அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம். இவை இரண்டும் இணையும் நாள் என்பதால், பன்னிரு கரங்களை உடைய முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக பங்குனி உத்திரம் சொல்லப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று முருகன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள், மஹோற்சவம், பிரம்மோற்சவம் ஆகியவை நடத்தப்படுவது வழக்கம்.

பங்குனி மாதத்தில் முருக பக்தர்கள் தேர் இழுப்பது, காவடி எடுப்பது, பால் அபிஷேகம் செய்வது இந்த மாதத்தின் மற்றொரு தனிச்சிறப்பாகும். சிவனின் தியானத்தை கலைத்த மன்மதனை, சிவ பெருமான் நெற்றிக்கண்ணை திறந்து எரித்து சாம்பலாக்கினார். இதனால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக சிவன் - பார்வதி தேவியை மணந்தார். இந்த நாளில் சிவன் - அம்பிகையை திருமண கோலத்தில் அலங்கரித்து வேத மந்திரங்கள் ஓத, ஹோமம் போன்றவை நடத்தி, இருவறையும் ஊர்வலமாக கொண்டு சென்று, பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் ஆன்மாக்கள் அனைத்தும் பரம்பொருளான சிவனுடன் ஐக்கியமாக வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்தும் உன்னத நாளாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திர தினத்தில் தான் மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு மதுரையில் திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதே போல் முருகன்-தெய்வானை, ராமர் - சீதை, ஸ்ரீரங்கநாதர் - ஆண்டாள் உள்ளிட்ட தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் சொல்லப்படுகிறது. அதனாலேயே பங்குனி உத்திரத்தன்று கடைபிடிக்கப்படும் விரதத்திற்கு கல்யாண விரதம், கல்யாண சுந்தர விரதம், திருமண விரதம் என அழைப்பதுண்டு. இந்த நாளில் திருமணமாகாத இளைஞர்களும், கன்னிப் பெண்களும் முருகன் மற்றும் சிவ பெருமானை திருமணக் கோலத்தில் கண்டு தரிசித்தால் அவர்களுக்கு நிச்சயம் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

அந்தவகையில், பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்குகிறது பழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவை தொடர்ந்து நாளை (மார்ச் 19) முதல் மார்ச் 27 வரை காலை சுவாமி கிரிவீதி உலா நடக்கிறது. தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, ஆறாம் நாளான மார்ச் 23 ல் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பங்குனி உத்திர தினமான மார்ச் 24 மாலை தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் , மார்ச் 27 இரவு 7:00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சன்னதி வீதியில் திரு உலா காட்சி, இரவு கொடி இறக்குதல் நடக்க ,தங்க குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.

பெளர்ணமி திதியும், உத்திர நட்சத்திரமும் மார்ச் 24ம் தேதியே துவங்கி இருந்தாலும் அன்று காலை சூரிய உதய நேரத்திற்கு பிறகே இரண்டும் துவங்குகின்றன. ஆனால் பஞ்சாங்க சாஸ்திரப்படி, ஒரு நாளின் சூரிய உதய நேரத்தின் போது என்ன திதி, நட்சத்திரம் உள்ளதோ அதுவே அந்த நாளுக்காக திதி மற்றும் நட்சத்திரமாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மார்ச் 25ம் தேதி சூரிய உதய நேரத்தின் போது தான் பெளர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் உள்ளன. இதனால் மார்ச் 25ம் தேதியை தான் பங்குனி உத்திர நாளாக கணக்கில் எடுத்துக் கொண்டு பக்தர்கள் விரதம் இருக்க வேண்டும்.

12வது மாதமான பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணைவதை தான் பங்குனி உத்திரம் என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு மற்றொரு சிறப்பும் இணைந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு பங்குனி உத்திரம் பங்குனி 12 ம் தேதியன்று கூடி வருகிறது. அனைத்தும் 12 என முருகனுக்குரிய எண்ணில் வருவதால் இது மிகவும் விசேஷமான ஒரு நாளாகும். மார்ச் 25ம் தேதி காலை 10.23 முதல் பகல் 03.02 வரை இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணமும் வருகிறது. அதனால் இந்த சமயத்தில் விரதம் வழிபாடு செய்வது பல மடங்கு அதிகமான பலனை தரும். அதோடு சிவ பெருமானுக்குரிய வழிபாட்டு நாளான திங்கட்கிழமையில் (சோமவாரம்) இணைந்து வருவது மற்றொரு விசேஷமாகும். இதனால் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் முருகப் பெருமானின் அருளுடன், சிவ பெருமானின் அருளையும் பெற முடியும்.

Readmore: சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்கு அதிரடி மாற்றம்…! காவல்துறை முக்கிய அறிவிப்பு…!

Tags :
Advertisement