Rameshwaram Cafe குண்டுவெடிப்பு..!! 3 மாதங்களுக்கு முன்பே ஸ்கெட்ச்..!! வெளியான அதிர்ச்சி சதித்திட்டம்..!!
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கு 3 மாதங்களுக்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், கைரேகை பதியாமல் இருக்க குற்றவாளி கையுறை அணிந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் நிர்வாக இயக்குநராக திவ்யா உள்ளார். குந்தலஹள்ளியில் உள்ள அந்த ஓட்டலில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் நடத்திய செயலா? என காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு கோணங்களில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் கஃபே தாக்குதல் நடத்துவதற்காக 3 மாதங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டலில் எப்போது மக்கள் அதிகம் வருவார்கள்? சிசிடிவி கேமரா இருந்தாலும் ஓட்டலில் இருந்து பாதுகாப்பாக எப்படி வெளியேறுவது, உளவுத்துறையினர் நகரத்தில் எங்கு அதிகமாக செயல்படுகின்றனர் என வெடிகுண்டு நிகழ்த்திய கும்பல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, இந்த தாக்குதலை நடத்திய நபர், செல்போன் பயன்படுத்தாமல் இந்த குற்றத்தைச் செய்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அத்துடன் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வணிகப் பிரச்சனையாகக் குறி வைக்கப்படவில்லை என்றும், உயிரிழப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் வெடிகுண்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மதியம் ஓட்டலுக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று முன்பே தகவல் சேகரித்து வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதல் நடந்த பிறகு குற்றவாளி எந்த பேருந்தில் திருப்பிச் செல்வது என்பது உள்ளிட்ட முக்கிய தகவல் முன்கூட்டியே சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில், சிசிடிவி கேமராக்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி மற்றும் கை ரேகை அடையாளங்களைத் தடுக்க கையுறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் சுமார் 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர், ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் இருந்து இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு வோல்வோ பேருந்தில் இருந்து இறங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் இந்த செயலுக்காக சொந்த வாகனத்தைப் பயன்படுத்தாமலும், பொது போக்குவரத்தில் பயணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தவர் அதில் வெடிகுண்டை வைக்காமல், ராமேஸ்வரம் கஃபேயில் ஏன் குண்டு வைத்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.