ராமர் கோவில் கும்பாபிஷேகம்!… மொரிஷியஸில் பொதுவிடுமுறை அறிவிப்பு!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் தினத்தன்று மொரிஷியஸ் அரசு இந்து மதத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மொரிஷியஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, சேவைத் தேவைகளுக்கு உட்பட்டு, இந்து மத பொது அதிகாரிகளுக்கு 2024 ஜனவரி 22 திங்கட்கிழமை இரண்டு மணிநேர சிறப்பு விடுமுறையை வழங்க அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் திரும்பியதைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் ஒரு முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது" என்றும் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் தலைமையிலான மொரிஷியஸ் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
மொரிஷியஸில் இந்து மதம் மிகப்பெரிய மதமாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொரிஷயஸ் மக்கள் தொகையில் சுமார் 48.5 சதவீத மக்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என உறுதிசெய்யப்பட்டது. நேபாளம் மற்றும் இந்தியாவைத் தொடர்ந்து, இந்து மத மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் மொரிஷியஸ் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மொரிஷியஸில், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.