பக்தர்களே உஷார்.! விஐபி நுழைவுச்சீட்டு.! 51 ரூபாயில் பிரசாதம்.! வாட்ஸ் அப்பில் பரவும் ராமர் கோவில் மோசடி.!
மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோவில் திறப்பிற்கான சிறப்பு பூஜைகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பல மோசடிகளிலும் ஈடுபட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. மேலும் பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி இருக்கிறார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பயன்படுத்தி நடைபெறும் இணையதளம் மோசடிகள் குறித்தும் அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த பதிவில் காணலாம். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு இலவச விஐபி பாஸ் வழங்குவதாக வாட்ஸ்ஆப் மூலம் மெசேஜ் அனுப்பி மோசடியில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சைபர் குற்றவாளிகள் பயனர்களின் வாட்ஸ் அப் செயலிக்கே ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இலவச விஐபி பாஸ் என்ற பெயரில் இணையதள லிங்கை அனுப்புகின்றனர் .
இந்த மெசேஜை பயனர்கள் கிளிக் செய்யும் போது ஏபிகே பைல் ஒன்றை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்துகிறது. அவற்றை பயனர்கள் இன்ஸ்டால் செய்ததும் வாழ்த்துக்கள் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கான இலவச விஐபி பாஸ் உங்களுக்கு கிடைத்துவிட்டது என்ற செய்தி வருகிறது. மேலும் இதை நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் விஐபி பாஸ் கிடைக்க உதவுங்கள் என்ற வாசகமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற மெசேஜ்களை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ்கள் ராம ஜென்ம பூமி அறக்கட்டளையால் மட்டுமே வழங்கப்படுகிறது எனத் தெரிவித்திருக்கும் அவர்கள் வாட்ஸ்ஆப் செயலியில் வரும் ஏபிகே செயலியை இன்ஸ்டால் செய்தால் அவற்றின் மூலம் உங்களது வங்கிக் கணக்கு ஏடிஎம் கார்டு மற்றும் கூகுள் பேய் போன்றவற்றின் பாஸ்வேர்ட் திருடப்படும் என எச்சரித்துள்ளனர். இவற்றை பயன்படுத்தி உங்களது ஆதார் கார்டு மற்றும் ஏடிஎம் விவரங்களை தெரிந்து கொண்டு பண மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
விஐபி பாஸ் தவிர ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என்ற மோசடியும் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரியர் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்ற தகவலுடன் மோசடி மெசேஜ் வலம் வருவதாக பலரும் குற்றம் சாட்டி இருக்கின்றனர் . காதி ஆர்கானிக் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் ராமர் கோவில் பிரசாதத்தை இலவசமாக அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சேவைக்காக கொரியர் கட்டணம் 51 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் எனவும் அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
இது தொடர்பாக 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவு செய்து இருக்கும் ஒரு நபர்" ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பிரசாதத்தை வழங்கும் ஒப்பந்தம் ராம் விலாஸ் & சன்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் காதி ஆர்கானிக் என்ற நிறுவனத்திற்கும் ராமஜென்ம பூமிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது போன்ற போலி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அந்த பதிவு தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக வரும் இது போன்ற மோசடி மெசேஜ்களை பயனர்கள் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் குற்றப்பிரிவு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இது போன்ற செயல்களின் மூலம் உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்து இருக்கிறது
உத்திர பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் "பொதுமக்கள் மோசடி கும்பல்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார். மேலும் இன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் யோகி "உண்மையான அழைப்பிதழ்களை கொண்ட நபர்களை மட்டுமே அயோத்தி நகருக்குள் கும்பாபிஷேக தினத்தன்று அனுமதிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார். மேலும் ஹோட்டல்கள் அனைத்தும் தங்களது முன்பதிவை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு இருக்கிறார். கும்பாபிஷேகம் நடைபெறும் தினமான ஜனவரி 22ஆம் தேதி ராமஜென்ம பூமியால் அழைக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே ஹோட்டலில் தங்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்து இருக்கிறார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கும்பாபிஷேக நிகழ்வை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இணையதள மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீ ராமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இது போன்ற மோசடி செயல்கள் நடைபெறுவதை தவிர்ப்பதற்காகவே ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பொதுமக்கள் வரவேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் தினத்தன்று தங்களது வீட்டில் தீபம் ஏற்றுவதே ஸ்ரீ ராமருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு எனவும் தெரிவித்திருந்தார்.