ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்பானியின் "அண்டிலியா" இல்லம்.!
உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இந்தியாவின் தொழில்துறை ஜாம்பவான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நண்பகல் 12:20 மணி முதல் 1:00 மணி வரை நடைபெற இருக்கும் இந்த சிறப்பு வைபவத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்று நடத்தி வைக்க இருக்கிறார்.
இந்த சிறப்புமிக்க நிகழ்விற்கு முகேஷ் அம்பானி அவரது தாயார் கோகிலா பெண் அம்பானி மனைவி நீதா அம்பானி மகன்கள் ஆகாஷ் அம்பானி ஆனந்த அம்பானி மருமகள் ஸ்லோகா மற்றும் அவர்களது மருமகளாக வர இருக்கும் ராதிகா மெர்சென்ட் ஆகியோருக்கு கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் கும்பாபிஷேக நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் மும்பையில் அமைந்துள்ள முகேஷ் அம்பானியின் வீட்டில் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது .
மும்பையில் அமைந்துள்ள அவரது வீடான 'அண்டிலியா' இல்லத்தில் ஜெய் ஸ்ரீ ராம் வாசகத்துடன் பிரான் பிரதிஷ்டா நிகழ்விற்காக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளை தனது நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று முகேஷ் அம்பானியும் தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இந்தியா முழுவதும் நாளை விடுமுறை அறிவித்திருக்கிறார். மேலும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவன வங்கிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிராமப்புற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் அரை நாள் விடுமுறைக்கான அறிவிப்பை மத்திய நிதி துறை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.