பரபரப்பு: "இன்டர்நெட்டில் வைரலான ஸ்ரீராமரின் உருவச்சிலை புகைப்படம்.." - விசாரணைக்கு உத்தரவிட தலைமை அர்ச்சகர் கோரிக்கை.!
அயோத்தி ராமர் கோவிலில் ராம் லாலாவின் குழந்தை பருவ சிலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைமை மதகுருவான ஆச்சாரியா சத்யேந்திர தாஸ் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலை சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கானதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சத்யேந்திர தாஸ் அளித்த பேட்டியில்" ஸ்ரீ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பாக அவற்றின் கண்களை யாருக்கும் வெளிப்படுத்தக் கூடாது என்பது மரபாக இருக்கிறது. வைரலான புகைப்படங்கள் ராம் லாலாவின் உண்மையான சிலையின் புகைப்படங்களாக இருக்காது. அவை உண்மையான சிலையாக இருக்கும் பட்சத்தில் அதனை இணையதளங்களில் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்து இருக்கிறார்.
ராமர் கோவிலில் ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலை கடந்த வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராம் லாலா சிலை குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை சில பிரபலங்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருந்தனர். இதுகுறித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளை மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் அதிகாரப்பூர்வமாக எந்த புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை எனவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ராமர் சிலை குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தவர்கள் கர்நாடகாவில் உள்ள சிறப்பு வாய்ந்த கருங்கற்களை கொண்டு ராம் லாலாவின் சிலை செய்யப்பட்டதாகவும் பதிவு செய்திருந்தனர். ராமர் சிலை புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் தனது கண்டனங்களை தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக பேசியிருக்கும் விஹெச்பி நிர்வாகிகள் " ஸ்ரீராமரின் சிலை நிறுவப்படுவதற்கு முன்பு ரகசியமாக போட்டோ எடுத்து இணையதளங்களில் பரப்பியதாக தெரிவித்திருக்கிறார். ராம் லாலாவின் முழு உருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கும்பாபிஷேக விழா துவங்கும் வரை ராமர் கோவிலின் நடை சாத்தப் பட்டிருக்கும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்து இருக்கிறது. மேலும் கோவிலுக்கான தரிசனமும் இன்று காலை முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீராமரின் குழந்தை பருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. பிரதமர் மோடி தலைமை ஏற்று ஸ்ரீராமரின் சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். அதற்கான சிறப்பு வழிபாடுகளை லட்சுமி காந்த் தீக்ஷித் தலைமையிலான மத குருமார்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்தக் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை நிகழ்வுகளுக்காக சிறப்பு விரதங்கள் மற்றும் சம்பிரதாயங்களை மூடி கடைப்பிடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.