For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராஜிவ் காந்தி கொலை வழக்கு... சாந்தன் உயிரிழந்த நிலையில் இலங்கை செல்லும் 3 தமிழர்கள் யார்?

05:06 PM Mar 26, 2024 IST | Baskar
ராஜிவ் காந்தி கொலை வழக்கு    சாந்தன் உயிரிழந்த நிலையில் இலங்கை செல்லும் 3 தமிழர்கள் யார்
Advertisement

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 32 ஆண்டுகளுக்கு மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை ஆளுநர் ஏற்கவில்லை. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்தது.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு சென்று இயல்பு வாழ்க்கையை தொடர்ந்தனர். மறுபக்கம் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தங்கள் வீடுகளுக்கு செல்லவில்லை. காரணம், அவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களை தாய் நாட்டுக்கு அனுப்புவதில் சட்ட சிக்கல் நிலவிய நிலையில், திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே சாந்தன் அங்கிருந்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். அதில் கடந்த 32 வருடங்களாகத் தனது தாயாரைப் பார்க்கவில்லை என்றும் தாயின் முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, ’சாந்தன் இலங்கை செல்ல இருந்த நிலையில் உடல்நிலை மோசமடைந்தது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். சிறையிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகளில் சாந்தன் தாய் நாடான இலங்கைக்கு செல்ல முடியாமல் காலமானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சூழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்கப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலங்கை தூதரகத்தால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement