மத்திய பாதுகாப்பு துறையின் செயலாளராக ராஜேஷ் குமார் சிங் நியமனம்...!
ராஜேஷ் குமார் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பேற்றார்.
1989 ஆம் ஆண்டின் கேரளவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், 2024 ஆகஸ்ட் 20 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பொறுப்பில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று இருந்தார். ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்புத் துறை செயலாளராக பொறுப்பேற்பதற்கு முன்பு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். "தாய் நாட்டின் சேவையில் மிக உயர்ந்த தியாகம் செய்யும் நமது துணிச்சலான வீரர்களுக்கு தேசம் என்றென்றும் கடன்பட்டிருக்கும். அவர்களின் அசாதாரண துணிச்சலும் தியாகமும் இந்தியாவை ஒரு பாதுகாப்பான மற்றும் வளமான, வலிமையான தேசமாக மாற்றுவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகும்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, ராஜேஷ் குமார் சிங், 2023 ஏப்ரல் 24 முதல் 2024 ஆகஸ்ட் 20 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளராக பொறுப்பு வகித்தார். அதற்கு முன்பு, அவர் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் செயலாளர் பதவியை வகித்தார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய அவர், கேரள மாநில அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளராகவும், கேரள அரசின் நிதித் துறை செயலாளராகவும் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். 2024 அக்டோபர் 31-ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற கிரிதர் அரமானேவுக்குப் பிறகு ஆர்.கே.சிங் பதவியேற்றுள்ளார்.