RR VS LSG | சாம்சன், பராக் அபாரம்.!! ராஜஸ்தான் ஆதிக்கத்தில் சரணடைந்த லக்னோ..!!
RR vs LSG: இன்று நடைபெற்ற IPL 2024 தொடரி நான்காவது போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் கிரிக்கெட்(IPL 2024) தொடரின் 17ஆவது சீசன் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்(RR vs LSG) அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது .
அந்த அணியின் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் ஜோஸ் பட்லர் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் மூன்றாவது விக்கெட்க்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 29 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஹெட் மேயர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். எனினும் இறுதிவரை அதிரடியாக ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரியுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருக்கு துணையாக ஆடிய துருவ் ஜூரல் 12 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவர்களது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர் டிகாக் 4 ரன்னிலும் தேவ்தத் படிக்கல் ரன் எதுவும் எடுக்காமலும் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆட வந்த பதோனி ஒரு ரன்னிலும் ஹூடா 26 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினார் .
லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பொறுப்புடன் விளையாடி 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதிவரை போராடிய லக்னோ அணியால் 20 ஓவர்களில் 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும் பர்கர் அஸ்வின் சஹால் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் ராஜஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.