ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: வாக்குச்சாவடி முகவர் மாரடைப்பால் மரணம்..!
சட்டபேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில், முகவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.
200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அதனைத்தொடர்ந்து ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 199 தொகுதிகளில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 90 ஆயிரத்து 146 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. நடந்து வரும் தேர்தலில் ஆளும் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சி அமைக்கும் நோக்கில் பாஜக தீவிரம் காட்டி வருகிற்து. அதே நேரத்தில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் வருவதை பாஜக நோக்கமாகக் கொண்டு தேர்தல் ப்ரிச்சரத்தில் ஈடுப்பட்டது. அதே போல் ஆளும் காங்கிரசை சேர்ந்த சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா என கட்சியின் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி 199 சட்டமன்ற தொகுதிகளில் 24.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 1.70 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சட்டபேரவை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி அறிவிக்கப்படும்.
இந்நிலையில் பாலி மாவட்டத்தில் உள்ள ஒரு வேட்பாளரின் வாக்குச்சாவடி முகவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சுமேர்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 47-ம் எண் சாவடியில் வாக்குச் சாவடி முகவரான சாந்தி லால் மையத்தில் சரிந்து விழுந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணத்திற்கு காரணம் மாரடைப்பு என்று சந்தேகிக்கப்படுகிறது. "சந்தேகத்திற்குரிய காரணம் மாரடைப்பு" என்று அதிகாரி கூறினார்.