Rajasthan | ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை.. 5 நாட்கள் போராடி மீட்ட மீட்புப்படை! - கடைசியில் நடந்த சோகம்
150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவன் ஆர்யன் 56 மணி நேர மீட்புப் பணிக்கு பின் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நங்கல் கிராமத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மாலை 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், சிறுவனை மீட்க முடியாததால், மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். சிறுவனை மீட்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. முன்னதாக ,150 அடி ஆழத்தில் கிடந்த சிறுவன் சுவாசிப்பதற்கு வசதியாக ஆக்சிஜனை குழாய் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், சிறுவனின் நிலையை கண்காணிக்க சிசிடிவி கேமரா உள்ளே பொருத்தப்பட்டது.
இருப்பினும், திங்கட்கிழமை, மருத்துவக் குழு தொடர்ந்து ஆக்ஸிஜனை வழங்கிய போதிலும் குழந்தையின் பக்கத்திலிருந்து எந்த அசைவும் காணப்படவில்லை. இந்நிலையில், கிணற்றில் துளையிடும் எந்திரங்களைப் பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டு வீரர்கள் உள்ளே இறங்கி ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடந்த சிறுவனை 55 மணி நேர போராட்டத்துக்கு பின், நேற்றிரவு 10 மணியளவில் சுயநினைவற்ற நிலையில் வெளியே எடுத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தன்ர்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரத்த அழுத்தம் அதிகரித்ததால் ஆர்யனின் தாயின் உடல்நிலை மோசமடைந்தது. பெற்றோர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாததால் அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் தாய் தந்தை இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.