வைத்திலிங்கம் வீட்டில் 15 மணி நேர ரெய்டு நிறைவு..!! பிரின்டர், லேப்டாப்புடன் உள்ளே சென்ற அதிகாரிகள்..!! நடந்தது என்ன..?
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் இவர், தற்போது ஓபிஎஸ் அணியின் உள்ளார். 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்த பிறகு, அமைச்சர் ஒப்புதல் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், வைத்திலிங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் அவரது 2 மகன்களான பிரபு மற்றும் சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று (அக்.23) வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை ஒரத்தநாடு அருகே உறந்தையான்குடிகாடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. அதேபோல், சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் சோதனை நடைபெற்றது.
இதற்கிடையே, வைத்திலிங்கத்தின் காரை திறந்து சோதனை செய்ததுடன், வீட்டை சுற்றிலும் அதிகாரிகள் வலம் வந்தனர். கைலி அணிந்திருந்த வைத்திலிங்கம் சோதனை தொடங்கும் போது வெளியே வந்து தனது ஆதராவளர்களை பார்த்து கையசைத்து விட்டு உள்ளே சென்றதுடன் சரி அதன் பிறகு வெளியே வரவே இல்லை. அவ்வப்போது மகன் ஆனந்த்பிரபு மட்டும் வாசல் வரை வந்து பார்த்து விட்டுச் சென்றார்.
பிரபுவின் மாமனார் பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி இருந்ததால், அமலாக்கத்துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். இதையடுத்து, பொறுமையை இழந்த அதிகாரிகள், உறவினர் முன்னிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். இதே போல், பிரபு வீட்டிற்கு 4 அதிகாரிகள் சென்றனர் அங்கு பிரபு இல்லை. அவரது மனைவி, மகன், மாமியார் மட்டுமே இருந்தனர். அமலாக்கத்துறை வந்திருக்கும் தகவல் அவருக்கு சொல்லப்பட்ட உடனே வந்த அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே, சோதனையை முடித்துவிட்டு அதிகாரிகள் வெளியே வருவார்கள் என ஆதரவாளர்கள் பலரும் முனு முனுத்தனர். இதுவரைக்கும் டிரெய்லர் தான் இனிமேல் தான் மெயின் பிக்சர் என்பது போல் இரவு 7 மணிக்கு பிறகு பிரின்டர், லேப்டாப் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் உள்ளே எடுத்துச் சென்றனர். இதையடுத்து, வைத்திலிங்கம் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றியதாக பரபரப்பு கிளம்பியது. கிட்டதட்ட 15 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனை முடிந்ததும் வெளியே வந்த அமலாக்கத்துறையினரை பெண் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு வழியனுப்பினார்.
பின்னர் வந்த வைத்திலிங்கத்தை பார்த்து 'உங்களுக்கு நாங்க இருக்கோம்' என ஆதரவாளர்கள் சொல்ல, அதற்கு அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "வந்தார்கள் ஆய்வு செய்தார்கள், என்னிடம் சில கேள்விகளை கேட்டார்கள். முறையாக பதில் சொன்னேன். சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். வீட்டில் இருந்து எதையும் எடுத்து செல்லலவில்லை" என கூறிவிட்டு சென்றார்.
உள்ளே சென்ற வைத்திலிங்கத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் செய்தியாளர்களை திட்டி தள்ளிவிட்டனர். இதைத்தொடர்ந்து மெயின்சாலைக்கு வந்து சாலையில் உட்கார்ந்து செய்தியாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Read More : இது மட்டும் நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா..? செம சர்ப்ரைஸ் இருக்கு..!!