மணிப்பூர் - மும்பை...! இன்று முதல் ராகுல் காந்தி யாத்திரை...! 1,000 பேருடன் தொடங்க மாநில அரசு அனுமதி...!
இம்பாலில் 1,000 பங்கேற்பாளர்களுடன் ராகுல் காந்தி யாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதியை வழங்கியதை அடுத்து இன்று யாத்திரை தொடங்க உள்ளது.
மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். இன்று முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும். ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையை மணிப்பூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் தொடங்க அம்மாநில அரசு அனுமதி மறுத்தது. இம்பாலில் 1,000 பங்கேற்பாளர்களுடன் யாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதியை வழங்கியதை அடுத்து இன்று யாத்திரை தொடங்க உள்ளது.
இந்த யாத்திரையில் 6,200 கிமீ தூரம் பயணிக்க உள்ளார். இம்முறை மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார். வரும் 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாரத ஜோடோ நியாய யாத்திரை தேசிய அரசியலில் மிகவும் கவனம் பெறும்.
இந்தியா கூட்டணி ஆலோசனை
எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்தியா கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நேற்று ஆன்லைன் வழியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அந்த கூட்டத்தில் கூட்டணியை வலுப்படுத்துவது, தொகுதி பங்கீடு குறித்து வியூகம் வகுப்பது, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் "பாரத் ஜோடோ நியாய யாத்ரா வில்" கூட்டணி கட்சிகள் பங்கேற்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.