Lok Sabha Election Results 2024 | வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை!
மக்களவை தேர்தல் வாக்கு எண்னிக்கை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். முதல்கட்டத்தேர்தலில் 66.1 சதவிகிதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66 புள்ளி 7 மற்றும் 61 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் கட்டத் தேர்தலில் 67.3, 60.5, 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகின.
கடைசி கட்டத் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேசத்தில் மொத்தம் நாட்டில் வாக்களிக்க தகுதியுடைய சுமார் 97 கோடி பேரில், 64 கோடியே 20 லட்சம் பேர் ஜனநாயக கடமையாற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு, ரே பரேலி தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ரேபரேலியில் 14000 வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாட்டில் 37000 வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் முன்னிலையில் இருக்கிறார்.
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். முதல் 3 சுற்றுகளில் பிரதமர் மோடி சுமார் 14000 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவை சந்தித்தார்.. எனினும் 4வது சுற்றில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார்.