என்னிடம் விசாரணையா..? என் வாழ்நாளில் இப்படி நடந்ததே இல்லை..!! இயக்குனர் நெல்சன் விளக்கம்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அவரது தொலைப்பேசி அழைப்புகளை வைத்து அடிக்கடி அவரிடம் பேசியவர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நெல்சனின் மனைவி மோனிஷாவிடமும் விசாரணை நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்பு, மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முன்பு என மோனிஷா அடிக்கடி கிருஷ்ணனுடன் தொலைப்பேசியில் பேசியிருப்பதை கண்டறிந்த போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மோனிஷாவின் கணவர் இயக்குனர் நெல்சனிடமும் இன்று போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இயக்குநர் நெல்சன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன்னிடம் போலீஸ் விசாரணை நடத்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது.
காவல்துறை தரப்பில் இருந்து தமக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை. என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. காவல்துறையின் எந்த அதிகாரியிடம் இந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியாது. இதுவரை என் வாழ்நாளில் காவல்துறையிடம் இருந்து போனிலோ, நேரிலோ எந்த அழைப்பும் வந்தது கிடையாது. எனவே, தகவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தாமல் வதந்தியை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுகின்றன” என்றார்.
Read More : வாழை, கொட்டுக்காளி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? அடேங்கப்பா இத்தனை கோடியா..?