அபாய கட்டத்தில் புழல் ஏரி..!! சுற்றுச்சுவர் பகுதி இடிந்து விழுந்ததால் சாலையில் வெள்ளப்பெருக்கு..?
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். மிக்ஜாம் புயல் காரணமாக இரு தினங்களாக சென்னை மற்றும் திருவள்ளூரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் புழல் ஏரியின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியது. இதன் காரணமாக புழல் ஏரியிலிருந்து முதலில் 500 கன அடி திறக்கப்பட்டு பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்டு நேற்று இரவு 5,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இருப்பினும் மழையின் அளவு சென்னை, திருவள்ளூரில் அதிகமாக காணப்பட்டதால் ஏரிக்கு நீர்வரத்து சுமார் 10,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதனால் ஏரியின் முழு கொள்ளளவு எட்டியதால் கரையின் சுவர்கள் மேல் இருந்து தண்ணீர் வெளியேற தொடங்கியது. இதனால் ஏரியின் சுற்று சுவர் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது. ஏரியின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி நேற்றிரவு கீழே சரிந்து விழுந்தது. இதில் இருந்து தண்ணீர் வெளியே வர தொடங்கியது. மேலும் அருகில் உள்ள சாலையில் தண்ணீர் சென்றதால் தார் சாலைகள் முழுவதுமாக விரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.