"நீ பத்தினி தானே.., கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு நிரூபி.." கொடூர கணவனின் நூதன தண்டனை.!
மனைவி தன்னை பத்தினி என்று நிரூபிப்பதற்காக ஊர் மக்கள் முன்பு கொதிக்கும் எண்ணெயில் அவரை கைவிடச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மண்டல வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அந்த கணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தேனேபள்ளே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குண்டையா. இவருக்கு தனது மனைவி மீது நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக அவரை அடித்து உதைத்தும் சித்தரவதை செய்திருக்கிறார். மேலும் தனது மனைவி தனக்கு உண்மையாக இருக்கிறார் என்பதை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கைவிட்டு நிரூபிக்கும் படியும் வற்புறுத்தி இருக்கிறார்.
மேலும் இதுபோன்ற வழக்கத்தை ஊர் மக்கள் முன்பாக செய்ய வேண்டும் என்பது அந்த ஊரின் நிபந்தனையாம். அதன்படி தனது மனைவி அவரது பத்தினி தன்மையை நிரூபிப்பதற்காக இவரது வீட்டில் அனைத்து மக்களும் கூடி இருந்த நிலையில் இந்தக் கொடூர தண்டனை பற்றி தகவல் அறிந்த மண்டல வளர்சி அதிகாரி கௌரி காவல்துறையினரின் உதவியுடன் அந்த அப்பாவி மனைவியை காப்பாற்றி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து விவசாயி குண்டையா கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய கௌரி "குண்டையா பலமுறை தனது மனைவியை சந்தேகப்பட்டு அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். தற்போது ஊர் மக்கள் முன்பாக கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கைவிட்டு தான் பத்தினி என்பதை நிரூபிக்க வற்புறுத்தப்பட்டுள்ளார். இதேபோன்று குண்டையாவும் செய்து காட்ட வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார்" என தெரிவித்திருக்கிறார். தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் குண்டையாவிற்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.