4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் (டிச.5) பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் கடந்த 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதையடுத்து, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (டிச.4) தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளையும் (டிச.5) பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.