Tn Govt: நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி..! முழு விவரம்..!!
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகம் எப்போது பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், மார்ச் 6-ம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 6-3-2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும். இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org என்ற இணையதளம் (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டு களிக்கலாம். ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை. நவீன தமிழ்நாட்டின் சிற்பி, தமிழ்த்தாயின் தவப்புதல்வன், ஓய்வில்லாமல் தமிழ் மக்களுக்காக உழைத்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையினைப் பறைசாற்றும் வகையில், நவீன மற்றும் புதுமையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத்தினைப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசிற்கும், அங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பினை நல்கி கண்டு களித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.