அதிர்ச்சி சம்பவம்.. புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தின் மீது வீசப்பட்ட சூப்.! சுற்றுச்சூழல் போராளிகள் கைவரிசை.!
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தின் மீது இரண்டு சமூக எதிர்ப்பாளர்கள் சூப்பை வீசினார்கள். பின்பு ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவிற்காக கோஷங்களை எழுப்பினர்.
16ஆம் நூற்றாண்டில், லியோனார்டோ டா வின்சி வரைந்த உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோனலிசா. இது உலகின் மிகப் பிரபலமான கலைப்படைப்புகளில் ஒன்றாகும். இது தற்போது மத்திய பாரிஸில் உள்ள லூவ்ரேயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உணவு எதிர்த்தாக்குதல் என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்த இரு பெண்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த மோனலிசா புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அந்த மோனலிசா ஓவியத்தின் மீது சூப்பை வீசினர்.
'ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு' பிரான்சில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் "எது முக்கியம் கலையா அல்லது ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவிற்கான உரிமையா? உங்கள் விவசாய முறைகள் நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. எங்களது விவசாயிகள் வேலையின் போது மடிந்து கொண்டிருக்கிறார்கள்" என்றும் கூறினர்.
மோனலிசா புகைப்படம் ஒரு பாதுகாப்பு கண்ணாடிக்கு பின் வைக்கப்பட்டிருந்ததால் எந்த சேதமும் அடையவில்லை என்று லூவ்ரே தெரிவித்தது. அருங்காட்சியினர் மோனலிசா புகைப்படத்தை சுத்தம் செய்வதற்காக கருப்பு திரையிட்டு, அங்குள்ள மக்களை வெளியேறச் செய்தனர். மேலும் அருங்காட்சியகம் அந்த எதிர்ப்பாளர்கள் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
Riposte Alimentaire (Food Counterattack) என்ற குழு இந்த எதிர்ப்பாளர்கள் செய்த செயலுக்கு பொறுப்பேற்றது. இந்த சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்கள் செய்த செயல்கள் அனைத்தும் தற்போது இணையதளங்களில் வீடியோவாக வெளியாகி, வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக பிரான்சில் உள்ள விவசாயிகள், எரிபொருள் விலை உயர்வை கண்டித்தும், விதிமுறைகளை எளிமைப்படுத்தவும் கோரி பல போராட்டங்களை செய்து வருகிறார்கள். மோனலிசா புகைப்படத்தின் மீது தாக்குதல் நடைபெறுவது இது முதன் முறையல்ல. ஆகையால் அந்த படம், குண்டு துளைக்க இயலாத கண்ணாடிக்கு பின்பு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.