Protein | ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீன் எடுத்தால் நல்லது..? அதிகப்படியாக எடுத்தால் நன்ன நடக்கும்..?
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி, அதிகப்படியாக செய்யும்போது, அது நமக்கு கேடு விளைவிக்கிறது. அந்த வகையில், தினமும் அதிக அளவு புரோட்டீன் சாப்பிடுவதும் நமது உடல் ஆரோக்கியத்தை நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு மோசமாக பாதிக்கும். அதிக அளவு புரோட்டின் சாப்பிடுவது மற்றும் ஆர்த்ரோஸ்கிளிரோசிஸ் ஆகிய இரண்டிற்கும் இடையேயான தொடர்பு குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
தினமும் நாம் அதிகளவு புரோட்டின் எடுத்துக் கொள்வதால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருட்கள் தமனி சுவர்கள் மற்றும் அதனை சுற்றி படிந்து விடுகிறது. இது ப்ளேக் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக தமனிகள் சுருக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுகிறது. இறுதியில் தமனிகள் வெடித்து ரத்த கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய தினசரி கலோரி உட்கொள்ளலில் 22 சதவீதத்திற்கும் அதிகமான புரதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது, தமனிகளில் ப்ளேக் உருவாக்கத்துடன் தொடர்புடைய நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படுகின்றன.
அதிகப்படியான புரதம் நமது இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி அதனால் மோசமான சிக்கல்கள் உருவாகிறது. இது நீங்கள் சாப்பிடக்கூடிய புரதத்தின் மூலம், உங்கள் உணவில் ஒட்டுமொத்த தரம் மற்றும் தனி நபர் காரணிகள் போன்ற பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் அமைகிறது. குறிப்பாக சிவப்பு இறைச்சி அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் இருந்து பெறப்படும் புரதத்தை நீங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது, அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த மூலங்களிலிருந்து பெறப்படும் புரதங்களில் சேச்சுரேட்டட் ஃபேட் மற்றும் கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருப்பதால் அது நமது இதய ஆரோக்கியத்தை தாக்குகிறது. அதே நேரத்தில் மெலிந்த இறைச்சிகள், கோழி, மீன், நட்ஸ் வகைகள், விதைகள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால் சார்ந்த பொருட்கள் போன்ற புரத மூலங்களை மிதமான அளவு சாப்பிடுவது நமது இதய ஆரோக்கியத்திற்கு நன்மையில் முடிவடைகிறது.
இது தவிர நமது ஒட்டுமொத்த உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நமது உடலில் ஒவ்வொரு கிலோகிராம் எடைக்கும் 0.8 முதல் 1.0 வரையிலான புரதம் பரிந்துரைக்கப்பட்ட அளவு. இது சராசரியாக பெண்களுக்கு 46 முதல் 50 கிராமாகவும், ஆண்களுக்கு 56 கிராமாகவும் உள்ளது. பாலினம், வயது, வாழ்க்கை முறை மற்றும் உடல் அமைப்பு ஆகியவற்றை பொறுத்து இந்த புரத தேவைகள் மாறுபடலாம்.
நமது உடலின் புரத தேவை பூர்த்தி அடைந்த பின் மீதமிருக்கக்கூடிய புரோட்டின் ஆற்றல் அல்லது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இதய ஆரோக்கியம் சீர்குலைவதை தவிர உடல் எடை அதிகரிப்பு, நீர்ச்சத்து இழப்பு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அதாவது வயிற்று உப்பிசம், மலச்சிக்கல் மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் புரதம் சாப்பிடுவதால் ஏற்படலாம். சில சமயங்களில் இது சிறுநீரக கற்களை உண்டாக்கி நாளடைவில் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
மேலும், இதய நோய் மற்றும் பல்வேறு வகையான புற்று நோய்கள் உட்பட நாள்பட்ட நோய்களுக்கான அபாயமும் அதிகரிக்கிறது. ஒருவரின் வயது, பாலினம், உடல் எடை, உடல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்றவற்றின் அடிப்படையிலே இந்த அதிகப்படியான புரோட்டின் அளவு என்பது அமையும் என்பதையும் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். சரிவிகித உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது நமது ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு உதவும்.