சொத்து வரி பெயர் மாற்றம்..!! கட்டணம் எவ்வளவு..? எப்படி மாற்றுவது..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!
வீடு அல்லது மனை வாங்கிய பின்பு அதற்கான ஆவணங்களை சரிபார்த்து பத்திரப்பதிவை முடித்தவர்கள், கையோடு சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சொத்து வரி என்பது ஒரு நகரத்திற்கும் சரி, வீடு வாங்குவோருக்கும் சரி, மிக முக்கியமானது. மாநகராட்சி அல்லது நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மைப் பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு சொத்து வரி மிக முக்கியம். இந்த சொத்து வரி என்பது நகராட்சி அலுவலகம் பராமரித்து வரும் சொத்து வரி பதிவேடுகளில் இருக்கும்.
பொதுவாக சொத்தின் புதிய உரிமையாளரின் பெயரை பதிந்து, மாற்றம் செய்யப்படாவிட்டால், ரசீதுகள் முந்தைய உரிமையாளர் பெயரில் வழங்கப்படும் நிலை ஏற்படும். எனவே, புதிதாக சொத்து வாங்கியவர்களுக்கு வரி செலுத்தாத நிலையில், அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது. பெயர் மற்றும் முகவரி மாற்றம் சம்பந்தமாக நம்மிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் எளிதாக சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய முடியும்.
சொத்து வரி ஏன் அவசியம்? பரம்பரை சொத்து அல்லது புதிதாக வாங்கப்பட்ட சொத்து ஆகிய எதுவாக இருந்தாலும் சொத்து மீதான உரிமையை நிலைநாட்ட சொத்து வரிக்கான பெயர் மாற்றம் அவசியம். அதற்கு நீங்கள், நீதித்துறை முத்திரையோடு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். சொத்து பற்றிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை அந்த பகுதி தாசில்தாரிடம் அல்லது வருவாய் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, ஆட்சேபணை இல்லா சான்றிதழ் (NOC) சமர்பிக்க வேண்டும்.
முந்தைய உரிமையாளர் காலமாகிவிட்டால் அவரது இறப்பு சான்றிதழ் அவசியம். சொத்துவரி பெயர் மாற்றியவர்கள் புதிய வீடுகள் அல்லது நிலங்களுக்கு உரிய வரியை சரியாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி பெயர் மாற்ற 500 முதல் 1,500 ரூபாய் வரை என்ற நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கட்டணம் இந்தாண்டு தொடக்கத்தில் மாற்றப்பட்டது. சென்னை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய சொத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை என்றால் 1,000 ரூபாய், 10 லட்சம் ரூபாய் வரை என்றால் 3,000 ரூபாய் கட்டணமாகும்.
ரூ.20 லட்சம் வரை என்றால் 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் வரை என்றால், 10,000 ரூபாய் கட்டணமாகும். ஒரு கோடி ரூபாய் என்றால், 20,000 ரூபாய் வரை கட்டணம் பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால், பெயர் மாற்ற ஒவ்வொரு ஒரு கோடிக்கும் 20,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.
Read More : மக்களே உஷார்..!! ஆவினில் காலாவதியான பிஸ்கட் விற்பனை..!! ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!