கலைஞர்களுக்கு ரூ.5,000 பரிசுத் தொகை...! தமிழக அரசு நடத்தும் கண்காட்சி..! உடனே விண்ணப்பிக்கவும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட்சிப்படுத்திடவும், ஓவிய சிற்பக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை நமது நாட்டின் பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும், கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் கலைப் பயிற்சிகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், கண்காட்சிகள் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓவிய, சிற்பக் கலையினை வளர்த்திடும் நோக்கில் அக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஓவிய, சிற்பக் கலைக் காட்சியினை மண்டல அலுவலகங்களில் நடத்திட திட்டமிடப்பட்டு செயல்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட மாவட்டங்களில் (காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர்) உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட்சிப்படுத்திடவும், ஓவிய சிற்பக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
இந்த ஓவிய, சிற்பக் கண்காட்சிக்கு கலைஞர்கள் தங்களது மரபு வழி, நவீனபாணி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் அனைத்து வகையான சிற்பப் படைப்புகளை வழங்கிட வேண்டும். அனைத்து ஓவிய, சிற்பக் கலைப் படைப்புகள், அனைத்தும் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் அளவில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தெரிவு செய்யப்படும். அதில் முதல் பரிசு 7 கலைஞர்களுக்கு தலா ரூ.5,000/-ம், இரண்டாம் பரிசு 7 கலைஞர்களுக்கு தலா ரூ.3.000/-ம். மூன்றாம் பரிசு 7 கலைஞர்களுக்கு தலா ரூ.2.000/-ம் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தங்களது கலைப் படைப்புகளை தன்விபரக் குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடன், உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், சதாவரம். (காது கேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளி அருகில்), ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு 02.12.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.