'பணமழை பொழியும் IPL திருவிழா..' இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?
17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின், ஒரு எலிமினேட்டர் மற்றும் 2 தகுதிச் சுற்றுக போட்டிகளின் முடிவில், சிறந்த இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ள ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக மொத்தம் ரூ.46.5 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, இன்று வெற்றிப்பெறப்போகும் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.20 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும். மேலும் தோல்வியடையும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.13 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும்.
இந்த தொடரில், மூன்றாவது இடம்பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.7 கோடியும், நான்காவது இடம்பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.6.5 கோடி ரூபாயும் வழங்கப்படும். விராட் கோலி ஆரஞ்ச் தொப்பியை பெற்றதற்காக ரூ.15 லட்சத்தை பரிசுத்தொகையாக பெறுவார். மேலும் பஞ்சாப் கிங்ஸ் பவுலரான ஹர்ஷல் படேல் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்புல் கேப்பை வைத்துள்ளார். அவருக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். வளர்ந்து வரும் வீரருக்கு ரூ.20 லட்சம் பரிசும், மிகவும் மதிப்புமிக்க வீரருக்கு ரூ.12 லட்சம் பரிசுத்தொகையாகவும் வழங்கப்படும்.