பிரதமர் வீடு கட்டும் திட்டம்.. மார்ச் 2029-க்குள் 4.95 கோடி வீடுகள்..! மத்திய அரசு தகவல்...!
2016 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" என்ற இலக்கை அடைய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. மார்ச் 2029-க்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்;
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் புதிய கட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024-25ம் நிதியாண்டு முதல் 2028-29ம் நிதியாண்டு வரை ரூ. 3,06,137 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் 3.33 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவற்றில் 3.23 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2.69 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் ரூ.2.37 லட்சம் கோடி பணம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டப் பயனாளிகள் ஜல் ஜீவன், பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி திட்டம் போன்ற பிற அரசு திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இதன் மூலமும் பயனடைகின்றனர். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் என்பது ஒரு வீட்டு வசதித் திட்டம் மட்டுமல்ல. கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்கான அரசின் முக்கிய முயற்சியாகும். இது கண்ணியம், அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்குகிறது.