'வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்' - ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!
ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் இன்று காலை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டறியப்பட்டு அதிபர் ரைசி, அவருடன் பயணித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” ஈரான் குடியரசின் தலைவர் டாக்டர் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது” என பதிவிட்டுள்ளார்.