ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரவாரம், கலாச்சார கொண்டாட்டங்களுடன் வரவேற்கப்பட்ட பிரதமர் மோடி..
சர்வதேச அளவில் பெட்ரோலிய எரிபொருட்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்து வருகிறது. உலகம் வெப்பம் அடைவதால், காலநிலை மாற்றம், பெருவெள்ளம், வரலாறு காணாத வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் அழிவுகள் அதிகரிகத்து வருகின்றன. இதனை அடிப்படையாக கொண்டு ஐக்கிய நாடுகள் பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டை கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், COP28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் டிசம்பர் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றைய தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார். துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு துணை பிரதமர் ஷேக் சயிப் பின் சயீத் அல் நயான் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார்.
முன்னதாக துபாய் வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், மோடி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே, இந்திய புலம்பெயர் உறுப்பினர்களிடம் இருந்து அன்பான வரவேற்பும், அதைத் தொடர்ந்து கலாச்சார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்திய புலம்பெயர் உறுப்பினர் ஒருவர், "நான் 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறேன், ஆனால் இன்று, எனது சொந்தக்காரர் ஒருவர் இந்த நாட்டிற்கு வந்திருப்பது போல் உணர்கிறேன்" என்று கூறினார்.
இது குறித்து தனது X இல் பதிவிட்ட பிரதமர் மோடி, துபாயில் உள்ள இந்திய சமூகத்தினரின் அன்பான வரவேற்பால் ஆழ்ந்து நெகிழ்ந்தேன். அவர்களின் ஆதரவும் உற்சாகமும் நமது துடிப்பான கலாச்சாரம் மற்றும் வலுவான பிணைப்புகளுக்கு ஒரு சான்றாகும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்,அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்,உள்ளிட்ட பலரும் பங்கேற்க இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து 3 உயர்மட்ட நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.