அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு விலையுயர்ந்த பரிசு அளித்த பிரதமர் மோடி!. வெளிநாட்டு தலைவர்கள் வழங்கியதிலேயே இதுதான் அதிக விலையாம்!.
PM Modi: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கிய ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரமானது வெளிநாட்டு தலைவர்கள் வழங்கியதிலேயே அதிக விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர், அவரது மனைவி ஜில் பைடன் மற்றும் முக்கிய தலைவர்கள் கடந்த 2023ம் ஆண்டு பெற்ற பரிசு பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி கடந்த 2023ம் ஆண்டு அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு 20ஆயிரம் டாலர் சுமார் ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரத்தை பரிசாக வழங்கியுள்ளார். ஜில் பைடன் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்றதிலேயே பிரதமர் மோடி வழங்கியது தான் அதிக விலை உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் தூதர் 4510 டாலர் ( ரூ.3.8லட்சம்) மதிப்புள்ள பிரேஸ்லெட், ப்ரூச், புகைப்பட ஆல்பத்தை அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வழங்கியுள்ளார்.
அதிபர் ஜோ பைடனும் விலைமதிப்பு மிக்க பல்வேறு பரிசு பொருட்களை வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்றுள்ளார். சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய அதிபரின் யூன் சுக் இயோலிடம் இருந்து 7100 டாலர் மதிப்புள்ள நினைவு புகைப்பட ஆல்பம், மங்கோலிய பிரதமரிடம் இருந்து 3,495டாலர் மதிப்புள்ள மங்கோலிய வீரர்களின் சிலை, வெள்ளிக் கிண்ணம் உட்பட பல்வேறு விலையுயர்ந்த பரிசு பொருட்களை அதிபர் பெற்றுள்ளார்.