முதல் இந்தியர்... பிரதமர் மோடிக்கு குவைத் அரசின் "தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்" உயரிய விருது...!
குவைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கப்பட்டது.
குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டுக்கு சென்றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்டியில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து பேசினார். இந்திய தொழிலாளர்களுக்கு அவர் விருந்து அளித்தார். அவர்களோடு விருந்தில் பங்கேற்றார்.
இரண்டாம் நாளான நேற்று குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமதுவை அவர் சந்தித்து பேசினார். அப்போது குவைத் அரசின் மிக உயரிய ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் மன்னர் வழங்கினார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை மோடி பெற்றார். விருதை வழங்கிய குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமது கூறும்போது, “இது குவைத்தின் மிக உயரிய விருது ஆகும். இந்த விருதை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது. இந்தியா, குவைத் இடையிலான உறவு மேலும் வலுவடையும்” என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு, கூட்டுறவு துறை, கலாச்சாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவின் சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் குவைத் இணைவது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகள் இடையே மொத்தம் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாதுகாப்பு, எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுகாதாரம், தொழில்நுட்பம், டிஜிட்டல் மயம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா, குவைத் இடையே வலுவான உறவு நீடிக்கிறது. குவைத்தின் அதிகாரப்பூர்வ கரன்சியாக இந்திய ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது. குவைத்தின் திறன்சார் தொழிலாளர்கள் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.