திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி..!! ஆளுநருடன் விரைந்த ஓபிஎஸ்..!! 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு..!!
பிரதமர் மோடி இன்று (ஜனவரி 2) திருச்சிக்கு வருகை தந்தார். தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி, முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதில், 33 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். உயர்கல்வி துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொள்கிறார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், பட்டம் பெறுபவருடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி. பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு இடங்களும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து ஆளுநர் ரவியுடன் ஒரே விமானத்தில் ஓபிஎஸ் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக சார்பில் பிரதமரை சந்திக்கவோ வரவேற்கவோ யாரும் செல்லவில்லை என கூறப்படுகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடியை வரவேற்க 7 இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.