புற்றுநோயை தடுக்கும்.. கொழுப்பை குறைக்கும்.. ஊறவைத்த வேர்க்கடலையில் இவ்வளவு நன்மைகளா..?
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் பீட்டா-சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. இது புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் மற்றும் ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாமில் எந்த அளவு ஊட்டச்சத்து உள்ளதோ, அதே அளவிற்கு நிலக்கடலையும் நிறைந்துள்ளதால் இதை ஏழைகளின் பாதாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்?
வைட்டமின் பி, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், புரதம், போன்ற பல்வேறு வகையான சத்துக்களை கொண்ட வேர்க்கடலையை பல வகைகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வறுத்த வேர்க்கடலை, வேகவைத்த வேர்க்கடலை, ஊறவைத்த வேர்க்கடலை, வேர்க்கடலை சட்னி என்று யார் யாருக்கு எப்படி பிடிக்குமோ அவ்வாறு தினமும் உணவில் கண்டிப்பாக வேர்க்கடலையை சேர்த்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
மேலும் வேர்க்கடலை தோலில் பைலட் ஆக்ஸிலேட் என்ற இரு வேதிப்பொருட்கள் உள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உறிஞ்சி கொள்வதை தடுத்து வருகிறது. எனவே வேர்க்கடலையை ஊற வைத்தோ அல்லது தோல் உரித்தோ சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துக்களை நம் உடல் முழுமையாக எடுத்து கொள்ளும். காலை வேளையில் சாப்பாட்டிற்கு முன்பாக ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடும்போது அன்றைய நாள் முழுவதும் தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது.
வேர்க்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாமல் பாதுகாக்கிறது. வாயு தொல்லை, வயிறு வலி, குடற்புண்கள் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு சத்து நிறைந்து இருப்பதால் இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு ஆற்றலை தருகிறது. ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் செய்கிறது. இதனால் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.