பறவை காய்ச்சல் எதிரொலி : தமிழக, கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்!
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதிக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் (H5N1 ) பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிழவி வந்தது.
இதனைத் தொடர்ந்து, கேரளத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி அருகில் கால்நடை துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, கேரளாவில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. இதற்காக 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் கால்நடைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.