அயோத்தி ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை..!! முதல் பூஜையை செய்தார் பிரதமர் மோடி..!!
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் உள்ள பக்தர்கள் ஆவலுடன் எதிர் நோக்கிய அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தேறியது.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடி இதற்காக கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வந்தார். அத்துடன் நாட்டில் உள்ள முக்கிய தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தார். கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது.
பிரதமர் மோடி காலை 11 மணியளவில் விமான மூலம் அயோத்தி நகர் வந்து சேர்ந்தார். இந்த விழாவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்த 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னதாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர். பட்டு வேட்டி சட்டையில் கோயிலுக்குள் வந்த மோடி, தனது கையில் குழந்தை ராமருக்கான வஸ்திரம் மற்றும் சிறிய குடை ஆகியவற்றை ஏந்தி வந்தார்.
கருவறை அருகே உள்ளே வந்த மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் அமர்ந்தார். சரியாக 12.20 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் நுழைந்த மோடி மற்றும் மோகன் பகவத் இருவரும் குழந்தை ராமர் சிலையின் எதிர்புறம் அமர்ந்து அங்கு நடைபெற்ற பூஜைகளில் கலந்து பங்கேற்றனர். தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யும் பூஜைகள் நடைபெற்றது. அங்கு கோயில் பூசாரிகள் கூறிய மந்திரங்களை பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும் உச்சரித்தனர்.
பிற்பகல் 12.30 மணியளவில் பிரதமர் மோடி தனது கையில் இருந்த பூக்களை ராமர் பாதத்தின் மீது தூவி பிரதிஷ்டை பணிகளை நிறைவு செய்தார். அவருடன் மோகன் பகவத் மற்றும் கோயில் பூசாரிகள் ராமர் பாதத்தில் பூக்களைச் சமர்ப்பித்தனர். இதன்மூலம் குழந்தை ராமர் சிலை பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் குழந்தை ராமரின் சிலை திறக்கப்பட்டதையொட்டி, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயில் வளாகத்தில் ஹெலிகாப்டர்கள் மலர் தூவின. நகைகளால் அலங்கரிக்கப்ட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும் குழந்தை ராமரின் திருவுருவ சிலை முன் பிரதமர் நரேந்திர மோடி மனமுருகி பிரார்த்தனை செய்தார். ராமர் கோயில் திறப்பையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.