7.3 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! இடிந்து விழுந்த கட்டிடங்கள்..!! சுனாமி எச்சரிக்கை..!!
ஆஸ்திரேலியா அருகே வனாவுட்டு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் போர்ட் விலாவில் இருந்து மேற்கே 30 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை மதியம் 1 மணிக்கு முன்னதாக தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நிமிடங்களுக்குப் பிறகு 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வனாவுட்டுக்கு சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அமெரிக்க தூதரகத்தில் சேதம் ஏற்பட்டது. கட்டடங்கள் இடிந்து விழுந்தன. "கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளின் அடிப்படையில், சில கடற்கரைகளில் அபாயகரமான சுனாமி அலைகள் முன்னறிவிக்கப்பட்டன" என்று நிலநடுக்கம் ஏற்பட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது.
பிஜி, கிரிபட்டி, நியூ கலிடோனியா மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பிற பசிபிக் தீவுகள், அலை மட்டத்தில் இருந்து 0.3 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் சுனாமி அலைகள் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.