சென்னை கிண்டி கலைஞர் மருத்துவமனையில் 2 மணி நேரம் மின் தடை...! நோயாளிகள் கடும் அவதி...!
கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று மாலை ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்மாற்றியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாகவும், ஜெனரேட்டரின் வயரிங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையின் நான்கு மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இருப்பினும், ஐசியூவில் இருந்த நோயாளிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மேலும் அவசரகால நோயாளிகள் மற்றும் ICU நோயாளிகள் ஜெனரேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். மின் விநியோகத்தை சீரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நோயாளிகள் பீதியடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். பின்னர், மருத்துவமனையில் மின்சாரம் சீரமைக்கப்பட்டதாகவும், மின்தடையை ஏற்படுத்திய ஜெனரேட்டரின் வயரிங் பகுதியை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய வட்டாரங்கள் கூறியதாவது: டிரான்ஸ்பார்மர் வரை மின் வினியோகம் இருந்தும், மருத்துவமனை வளாகம் வரை மின் கம்பிகளை பராமரிக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர் .