நாளை தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும்...! தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்...!
நாளை தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்பட உள்ளன.
இந்த வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக, இந்த மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் அறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணும் பகுதி, ஊடக மையம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உணவு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகன நிறுத்த இடங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நாளை தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் 1,055 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.