4 தேசிய விருதுகளை தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்!. 'எல்லா புகழும் இறைவனுக்கே'!. ARR பெருமிதம்!
National Awards: மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி, சினிமா கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 70 ஆவது தேசிய திரைப்பட விருது கடந்த ஆக. 16 அறிவிக்கப்பட்டது. அதில், 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த விருதுகள் நேற்று கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன. டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் ஐஸ்வர்யாராய், விக்ரம், கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, சோபிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதன் படி, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிஅமைப்பு என 4 பிரிவுகளில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த விருதுகள் நேற்று கலைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன் படி, சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் இயக்குநர்மணிரத்னம் பெற்றுக்கொண்டார். அதே போல, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 - ல் இசையமைப்பாளராக பணியாற்றிய ஏ. ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இது அவர் வாங்கும் 7 வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஒலி அமைப்பிற்கான விருது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒலி அமைப்பாளராக பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.
தமிழில் சிறந்த நடிகைக்கான விருது தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்த நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார். அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பெருமளவு கொண்டாடப்பட்டது. இதில் சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதுக்கு தேர்வான ஜானி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது விருது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நடன இயக்குநர் சதீஷ் மட்டும் விருதினை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: கோயிலுக்கு செல்பவர்கள் இந்த பாவத்தை மட்டும் பண்ணிடாதீங்க..!! பக்தர்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!