இன்றுமுதல் பொங்கல் பரிசு விநியோகம்!... முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்!
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைக்கவுள்ளார்.
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்
இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி ஞாயிற்றுகிழமை தொடங்கியது. தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் வரும் 10 ஆம் தேதி (இன்று) முதல் பொங்கல் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னரே மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வழக்கமாக இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும், ஆனால், இந்த வெள்ளிக்கிழமை (12 ஆம் தேதி) ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயனாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பயணாளர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். டோக்கனில் எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் தொகுப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதி நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.