ஸ்டாலின் முதல் விஜய் வரை.. கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொன்ன தலைவர்கள்..!! ட்வீட்டில் சொன்ன மெசேஜ் என்ன தெரியுமா?
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி : உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையை காட்டட்டும். CBCI இல் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் இதோ…
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற வன்முறையைத் தவிர்த்து ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று பொறுமையையும், ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதை கொடுத்து விடுங்கள் என்று ஈகையையும், பகைவர்களையும் நேசியுங்கள், என இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான்.
போர்கள், வெறுப்புணர்வால் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் இயேசு கிறிஸ்து காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையே மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற இயேசு பிரானின் போதனைகளை மனதில்கொண்டு அனைவரையும் சமமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். தேவகுமாரன் இயேசு பிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
தவெக தலைவர் விஜய் : “இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ரவி : கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! ஆண்டவர் இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, இணக்கமான மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான உறுதியை வலுப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார்.
Read more ; ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே..’ தமிழ் சினிமாவில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் பாடல்கள்..!!