கவனம்...! சிவில் விவகாரங்களில் போலீசார் தேவையின்றி விசாரிக்க கூடாது...! உத்தரவு பிறப்பித்த கூடுதல் டிஜிபி...
சிவில் விவகாரங்களில் போலீசார் தேவையின்றி விசாரிக்க கூடாது. ஒருவேளை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற ரீதியில் விசாரிக்க வேண்டுமென்றால் CSR அல்லது FIR பதிவு செய்த பின்னர் தான் விசாரிக்க வேண்டும் என கூடுதல் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
பணத் தகராறு, நிலத் தகராறு, சொத்துத் தகராறு, பாதைத் தகராறு, அறிவுசார் சொத்துத் தகராறு போன்ற சிவில் தொடர்புடைய மனுக்கள் மீது சில காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் தவிர, சிவில் பிரச்னைகளில் போலீசார் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என தமிழக கூடுதல் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது; அதன் படி, CSR அல்லது FIR அல்லது உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய தாள் அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்தவொரு மனுக்கள் மீதும் காவல்துறையால் எந்த விசாரணையும் இருக்கக்கூடாது. மேலும் பணத் தகராறு, நிலத் தகராறு, சொத்துத் தகராறு, பாதைத் தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் விசாரணை செய்வதையோ அல்லது தலையிடுவதையோ காவல்துறை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
எதிர்பார்க்கப்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக, சிவில் விவகாரங்களில் விசாரணை நடத்துவது அல்லது தலையிடுவது முற்றிலும் அவசியம் என்று காவல்துறை அதிகாரி கருதினால், சம்பந்தப்பட்ட அலுவலர் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகரங்களில் உள்ள காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பட்ட ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு காவல்துறை அதிகாரியும் சிவில் விவகாரங்கள் மீதான எந்தவொரு மனு விசாரணையும் சட்டவிரோதமாகக் கருதப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.