லிஸ்ட் ரெடி.. 6000 ரெளடிகளுக்கு செக்.. இனி ஆக்ஷன் தான்!! அதிரடியில் இறங்கிய சென்னை கமிஷனர்!!
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருணை, சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. போதை பொருட்கள் விநியோகமும் அதிகமாக இருப்பதால் இது போன்ற குற்ற சம்பவங்களில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் திமுக அரசு சட்டம் ஒழுங்கை சரிவர கையாலவில்லையென விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பதவியேற்ற உடன் சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் மற்றும் உளவுத்துறை இணை கமிஷனர் தர்மராஜ், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களுடன் ரவுடிகளை ஒடுக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில்,'சென்னை பெருநகர் முழுவதும் குற்றங்களில் ஈடுபட்ட 6 ஆயிரம் குற்றவாளிகள் குறித்த முழு விபரங்களை 2 நாட்களுக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும். கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளில் 700 பேர் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களின் முழு குற்ற விபரங்களையும் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள், திருடர்கள் என 6 ஆயிரம் குற்றவாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, அவர்கள் தற்போது அங்கு வசிக்கிறார்களா என்று உறுதி செய்ய வேண்டும். அப்படி அவர்கள் வசிக்க வில்லை என்றால் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும் என கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள் கணக்கெடுக்கும் பணியானது அனைத்தும் துணை ஆணையர் நேரடியாக கண்காணிப்பில் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஒரு காவல் நிலைய எல்லையில் கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நடப்பதற்கு முன் சம்பந்தபட்ட குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர்கள் கைது செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ள காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை தொடர்பில் உள்ளவர்களை உளவுத்துறை அவர்களுக்கு குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.