சிக்கன் ரைஸில் விஷம்: தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாயும் உயிரிழப்பு..! நாமக்கல்லில் அதிர்ச்சி..!!
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்தவர் பகவதி. பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவர், நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டலில் சிக்கன் ரைஸ் பார்சல்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதில் இரண்டை தனது தம்பி ஆதி (18) என்பவர் மூலம் தனது தாத்தா சண்முகநாதன் (72) வசிக்கும் எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்திற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். மீதம் உள்ளதை தனது அம்மாவிடம் கொடுத்துள்ளார். இரவு 8.30 மணியளவில் பகவதியின் தாய் நதியா அந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டபோது அதில் வித்தியாசமான வாசனையை உணர்ந்ததால், அதனை தொடர்ந்து சாப்பிடாமல் வைத்து விட்டு தனது தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால், சண்முகநாதன் ஏற்கனவே அந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டு முடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சண்முகநாதன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நதியாவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தாத்தா சண்முகநாதன் நேற்றைய தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அந்த சிக்கன் ரைஸை தடயவியல் சோதனைக்கு அனுப்பிய நிலையில், அந்த சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஹோட்டல் உரிமையாளர் ஜீவாநந்தன் மற்றும் உணவு பார்சல் வாங்கி சென்ற பகவதியிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததை பகவதி ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது, "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்தபோது தனது தாயாரும் தாத்தாவும் அதை ஏற்காததால், தன்னுடைய குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது முதல் தன்னிடம் தாய் நதியா பாசமாக இல்லை.
மேலும் ஒரு பெண்ணிடம் தனக்கு உள்ள தவறான பழக்கம், செல் போனில் ஆபாச படங்களை அடிக்கடி பார்த்தது குறித்து தாயும், தாத்தாவும் கண்டித்ததால் அனைவரையும் விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக நாமக்கல்லில் உள்ள அக்ரோ கடையில் கடந்த 27 ம் தேதியே, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வைத்துக்கொண்டேன். பின்னர் 30 ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று, சிக்கன் ரைஸ் உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தேன்"என தெரிவித்தார். இதனையடுத்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பகவதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் பகவதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் நேற்றைய தினம் தாத்தா சண்முகநாதன் உயிரிழந்ததையடுத்து, தற்போது தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு.