இது வெறும் ட்ரைலர்... அடுத்த 20 ஆண்டுகள் எங்களுடைய ஆட்சி தான்..!! - பிரதமர் மோடி சூளுரை
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இந்த முறை தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி கட்சி எம்பிக்களுடன் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்றனர். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் நடத்தி ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 27 ம் தேதி லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் மத்தியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பதிலுரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியை நம்பி, மக்கள் 3வது முறையாக வாய்ப்பளித்துள்ளனர். 60 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக நமது அரசு தொடர்ந்து ஆட்சியமைத்துள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கின்றனர். தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை சிலர் ஏற்க மறுக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகள் அரசு வழங்கியது வெறும் சிற்றுண்டி தான்,, மெயின் உணவே இனிமே வர உள்ளது. இந்த தேர்தலில் இந்த நாட்டு மக்களின் புத்திசாலித்தனம் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்கள் பொய் பிரச்சாரத்தை தோற்கடித்தனர். அவர்கள் செயல்திறனுக்கு முன்னுரிமை அளித்தனர்.
மக்கள் கொடுத்த வெற்றியால், இந்திய பொருளாதாரம், 3வது இடத்திற்கு செல்லும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய பொருளாதாரத்தை 10 வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். ‛ ஆட்டோ பைலட்' மோடில் இந்திய பொருளாதாரம் வளரும் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஆட்டோ பைலட் முறையிலேயே காங்கிரஸ் ஆட்சி செய்தது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகிறோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜ., ஆட்சி தான்.
அரசியல் சாசனத்தை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான். அரசியலமைப்பு சட்டம் நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல் உதவும் . எனது அரசுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்ட புத்தகத்தை சிலர் கையில் வைத்துக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டது ஏன்? அரசியல் அமைப்பு சட்டத்தை மாணவர்கள் புரிந்து கொண்டு மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். குடியரசு தினம் இருக்கும் போது தனியாக அரசியல் சாசன தினம் ஏன் என எதிர்க்கட்சிகள் கேட்டன, என பேசினார். அப்போது பிரதமரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.