Rahul Gandhi | "கற்பழிப்பு குற்றவாளிக்கு வாக்கு கேட்கும் மோடி"… பாஜக- ஜனதா தளம் கூட்டணியை விமர்சித்த ராகுல் காந்தி.!!
Rahul Gandhi: கர்நாடக மாநில ஹாசன் தொகுதியின் எம்பி மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது சமீபத்தில் வெளியான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். இந்தக் குற்றத்தை 'வெகுஜன பலாத்காரம்' என்றழைத்த ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு ஆதரவாக பாஜக மற்றும் பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
கர்நாடகா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி(Rahul Gandhi) பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வெகுஜன பலாத்காரம் செய்பவர் என்பது ஒவ்வொரு பாஜக தலைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் பாஜக ஜேடி(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்தது என தெரிவித்தார். பிரியங்கா காந்தி கூறியதை மீண்டும் வலியுறுத்திய ராகுல் காந்தி ஒரு வெகுஜன பலாத்கார குற்றவாளியை பிரதமர் மோடி ஆதரித்தார்” இதற்காக அவர் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மேடையில் கூறினார்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி கரூர் "ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் கர்நாடகாவில் மட்டுமின்றி வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து இடங்களிலும் எதிரொளிக்கும் என தெரிவித்தார். ஒரு கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தங்களது நிலைப்பாட்டை விளக்குவது பாஜகவிற்கு கடினமான ஒன்றாக இருக்கும்" என்று கூறினார்.
இதற்கிடையில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஹாசன் ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய லுக்அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வரா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருப்பதால் வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் ஆஜராக மேலும் 7 நாட்கள் அவகாசம் கோரி இருந்தார். இதற்கு பதில் அளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் 24 மணி நேரத்திற்கு மேல் அவகாசம் வழங்க எந்த விதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.